Sunday, 29 June 2014

மகா பெரியவா

மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்

அந்த அம்மாள் காஞ்சிமாமுனிவரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார். தாம் கண்ட ஆச்சர்யமான கனவு ஒன்றை ஸ்வாமிகளிடம் விவரித்தார். “நான் ஒரு தங்கக் கிண்ணத்தில் கற்கண்டும் திராட்சைப் பழமும் சமர்ப்பித்துத் தங்களிடம் ஆசியைப் பெறுவதுபோல் கனவு கண்டேன்” என்றார் அந்தப் பெண்மணி.
“அப்படியா, அதுமாதிரி செய்ய உனக்கு விருப்பம் இருந்தா அப்படியே செய்” என்றார் ஸ்வாமிகள்.
“இந்த ஏழையிடம் அதற்கான மனம் இருக்கிறதே தவிர பணம் இல்லையே!” என்று ஏக்கத்துடன் கூறினார் அந்தப் பெண்மணி.
“சௌகரியப்படும்போது செய்யலாம்” என்றார்கள்.
சிறிது காலம் சென்றது. அந்த அம்மாளின் பெரிய தகப்பனார் தம் சொத்தில் ஒரு பங்கை அந்தப் பெண்மணி பேருக்கு எழுதி வைத்து இறந்து போனார். அதன் பிறகு அந்த அம்மாள் சுமார் ரூபாய் நான்காயிரம் எடுத்துக் கொண்டு ஸ்வாமிகளிடம் வந்தார். ஒரு தட்டில் பணத்தைச் சமர்ப்பித்தார்.
“எதுக்கு இந்தப் பணத்தை என்னிடம் கொடுக்கிறாய்!” என்று கேட்டார்கள். அதற்கு அந்த அம்மாள் தாம் முன்பு கூறியபடி தங்கக் கிண்ணத்தில் கற்கண்டும், திராட்சையும் சேர்த்துக் கொடுப்பதற்குப் பதில் பணமாகவே சமர்ப்பித்து விடலாம் என்று எண்ணியதாகக் கூறினார்.
“உன் சொப்பனத்தில் நீ எப்படிச் செய்கிறதாகக் கண்டாயோ அதுமாதிரி விருப்பமானால் செய்யலாம். அதுக்குப் பதில் பணமாகக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை” என்றார் ஆசார்ய ஸ்வாமிகள்.
அந்தப் பெண்மணி பணத்தைத் திரும்ப எடுத்துக் கொண்டு சென்றார். தங்கத்தினால் சிறிய கிண்ணம் ஒன்றைச் செய்வித்து, அதில் நிறைய கற்கண்டும், திராட்சைப் பழமும் வைத்து மறுபடியும் ஸ்வாமிகளிடம் கொணர்ந்தார். அந்தச் சமயம் அவர்கள் காட்டுப்பள்ளியில் எழுந்தருளி இருந்தார்கள். தங்கக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்ட ஸ்வாமிகள் அந்தப் பெண்மணிக்கு ஆசி வழங்கினார்கள். அந்த அம்மாள் தன் கனவு நிறைவேறியதனால் மிக்க மனநிறைவோடு விடை பெற்றுக் கொண்டார்.
பிறகு ஸ்வாமிகள் மடத்து அதிகாரியிடம், “இதைக் கணக்கில் சேர்த்துக் கொள்வதில் ஆக்ஷேபம் ஏதும் உண்டா?” என்று கேட்டார்கள். அதிகாரி சற்றுத் தயங்கினார். தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம் அமலில் இருந்த சமயம் அது. அவருடைய தயக்கத்தைப் புரிந்து கொண்டார்கள் ஸ்வாமிகள். “இதை இப்படியே மடத்துக் கணக்கில் சேர்த்துவிட்டால் நான் ஒரு பொய்க்கு உடந்தையாக இருந்ததாக முடியும். நான் உங்களுக்கெல்லாம் வழி காட்டுகிற பீடத்தில் இருந்து கொண்டு ஒரு பொய் சொன்னால், அப்புறம் நீங்களெல்லாம் அதுபோல் ஒன்பது மடங்கு பொய்யைக் கூசாமல் சொல்லலாம் அல்லவா? எனவே எது நியாயமோ அதையே செய்ய வேண்டும்” என்று திருவாய் மலர்ந்தருளினார்கள்.
சரி. அப்படியானால் ஸ்வாமிகள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை ஊகிக்க முடியாமல் அதிகாரி திகைத்தார். “இந்தக் கிண்ணத்தைச் சென்னைக்குக் கொண்டு போய் தேசிய பாதுகாப்பு நிதிக்கு என்று முதல் மந்திரியிடம் சேர்த்து விடுங்கள்” என்று கூறி உடனே அதை அனுப்பி விட்டார்கள்.
அப்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயம் – (1965). சென்னை சென்றிருந்தவர்கள் அப்பொழுதிருந்த முதல்வர் மூலமாக அந்த தங்கக் கிண்ணத்தை யுத்தத்தின் முன்னணியில் நின்ற நம் வீரர்களுக்கு அனுப்பி வைத்தார். அதிலிருந்த பிரசாதம் போர்முனையில் நின்ற நம் பாரத வீரர்களுக்கு விநியோகிக்கப் பெற்றது.
மஹா பெரியவா அருள்வாக்கு : -
* செல்வத்தில் சிறந்த செல்வம் நல்லறிவே. அதனால் அம்பிகையின் திருவடியில் சரணடைந்து நல்லறிவைத் தரும்படி வேண்டுங்கள்.
* இதயத்தில் கடவுள் குடியிருக்கிறார். அதில் கீழான சிந்தனையை அனுமதித்து குப்பைத் தொட்டியாக வைத்திருப்பது கூடாது.
Thanks Balhanuman.

No comments:

Post a Comment