Friday, 30 May 2014

விரல் அசைத்தால் வீல்சேர் இயங்கும்!நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேரை உருவாக்கியுள்ள, கல்லூரி மாணவன், அருண்: நான், புதுவை, ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறையில், நான்காம் ஆண்டு படித்து வருகிறேன். கடந்த சில மாதங்களுக்கு முன், கல்லூரியின் சமூக சேவைப்பணிக்காக, புதுவை மாநிலம், அரியாங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள, 'பேபி சாரா ஹோம்' என்ற தொண்டு நிறுவன இல்லத்திற்கு சென்றோம். 

  

அப்போது, போலியோவால் பாதிக்கப்பட்ட ஒருவர், கை மற்றும் கால்கள் செயலிழந்த நிலையில், அந்த இல்லத்தில் தங்கி இருந்தார். மாற்றுத் திறனாளியான அந்த நபரால் அங்கிருந்த, 'வீல்சேரை' பயன்படுத்த முடியாமல், அனைத்து வேலைகளுக்கும் மற்றவரையே சார்ந்திருந்தார். சமூக சேவை செய்யும் எண்ணத்தில் அங்கு சென்ற எங்களால், அந்த நிகழ்வை பார்த்ததும், இதற்கு ஏதேனும் ஒரு கருவியை கண்டுபிடிக்க வேண்டும் என, நண்பர்களுடன் இணைந்து உறுதியெடுத்தோம். எனவே, இப்பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, கை மற்றும் கால்களை இழந்தவர்கள் பயன்படுத்தும் வகையில், பேட்டரி யில் இயங்கும் வீல்சேரை, குறைந்த விலையில் உருவாக்கினோம். கை விரல் அசை வின் மூலம், இந்த வீல்சேரை நகர்த்தவும், வெவ்வேறு திசைகளில் திருப்பவும், விரும்புகிற இடத்தில் நிறுத்தவும் இயலும். மேலும், குரலின் மூலமாகவும், குறிப்பிட்ட அறையிலுள்ள மின்சாதன பொருட்களை கட்டுப்படுத்த முடியும். ஸ்மார்ட் போனில் உள்ள, 'அக்சிலிரோமீட்டர்' தொழில்நுட்பத்தையும் இதில் பயன்படுத்தி இருக்கிறோம். பேட்டரியில் இயங்கும் இந்த கருவியை, மின்சாரம் மட்டுமல்லாமல், சோலார் மூலமும் சார்ஜ் செய்து கொள்ளலாம். பேட்டரியின், 'சார்ஜ்' அளவை அறிந்து கொள்ள, மூன்று விளக்குகளை பொருத்தி உள்ளோம். அதிகபட்சமாக, 10 மணி நேரம் வரை, தொடர்ச்சியாக இதை பயன்படுத்தலாம். இந்த வீல்சேர், 5 கி.மீ., வேகம் வரை நகரும் திறன் கொண்டது. மேலும், இதன் மூலம் மலைப்பகுதிகளில் ஏறவும், இறங்கவும் இயலும். அதுமட்டுமின்றி, வீல்சேர் செல்லும் வழியில் தடைகளை கண்டறிவதற்காக, 'சென்சார்' பொருத்தியுள்ளோம். மேற்கூறிய தொழில்நுட்பத்துடன் வீல்சேரை தயாரிக்க மொத்தம், 25 ஆயிரம் ரூபாய் செலவானது. நாங்கள் தயாரித்த இந்த வீல்சேரை, பேபி சாரா ஹோமில் உள்ள அந்த மாற்றுத்திறனாளிக்கே விரைவில் வழங்க இருக்கிறோம். இது, மனதிற்கு மகிழ்ச்சியையும், இன்னும் அதிகமாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நன்றி :தினமலர் 

No comments:

Post a Comment