மகா பெரியவா

சிவந்த சிவப்பழத் திருமேனி; பூசிய வெண்ணீறு; இளம் சிவப்பேறிய காவித் துணி, பாரிஜாத பூச்செண்டு போன்ற பாதாரவிந்தங்கள். கல்லிலும், முள்ளிலும், வெயிலிலும், மழையிலும் உலக க்ஷேமத்திற்காகவும், கலாச்சாரத்தின் தொன்மையைக் காக்கவும், வேத தர்மம் தழைக்கவும் நடமாட வந்ததோ ?
பண்டரிபுரத்தில் பெரியவா தங்கியிருந்த சமயம். அருகேயிருந்த சர்க்கரை ஆலையின் அதிகாரி, பெரியவாளிடம் அவரது பாதாரவிந்தங்கள் தமது ஆலையை ஒரு முறை மிதிக்க வேண்டும் என்று வேண்டி, அப்பொழுதே வருவதாக இருந்தால் தமது வண்டியிலேயே அழைத்துப்போய் வந்து விடுவதாகக் கூறினார். பெரியவாள் உடனே சிரித்து விட்டு, “நான் சக்கரம் வைத்த வண்டியில் ஏறுவதில்லை” என்று கூறினார். வந்த அதிகாரி மிகவும் ஆச்சர்யப்பட்டு “இந்த இருபதாம் நூற்றாண்டிலே தாங்கள் இப்படி இருக்க வேண்டுமா ? வண்டியில் வந்தால் பல மணி நேரம் மிச்சமாகுமே, அதிகமான இடங்களைக் காண வாய்ப்புக் கிடைக்குமே” என்றார்.
பெரியவாள், “நான் பதிமூன்று வயதில் பட்டத்திற்கு வந்த உடனே சக்கரம் வைத்த வண்டியில் ஏறுவதில்லை என்று சங்கற்பித்துக் கொண்டேன். ஒரு முறை நான் ஒரு ஊருக்குச் சென்று கொண்டிருந்தேன். மழையே இல்லாமல் இருந்த அந்த ஊரில் என்னவோ தெரியவில்லை, நல்ல மழை பிடித்துக் கொண்டது. போகும் வழியில் இருபுறமும் பள்ளமாகவும் நடுவே சற்று மேடாகவும் இருந்ததால், ஓடும் நீரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அந்நிலத்திலிருந்த ஜீவராசிகள் பலவும் மேட்டுக்கு வந்து விட்டன. அப்பொழுது சாலையில் சென்ற பல வாகனங்களால் அவற்றிற்கு அழிவு ஏற்பட்டது. அன்றே நான் சக்கரம் வைத்த வண்டியில் ஏறி ஜீவ ஹிம்சைக்குக் காரணமாகக் கூடாது என்று மீண்டும் சங்கல்பித்துக் கொண்டேன் .
இன்னொரு காரணமும் உண்டு.
வண்டியில் போவதால் பல ஊர்களைக் காண இயலாது போய் விடும். வாஹனத்தில் திடீரென்று ஓர் ஊருக்குப் போய் இறங்கினால் அங்குள்ளவர்களுக்குச் சிரமம். நடந்து போவதால் போகும் இடத்திலுள்ள மக்கள் அடுத்த ஊருக்கு முன்பே தெரியப்படுத்தி வசதி செய்து தருகின்றார்கள் இல்லையா ?” என்ற வினா எழுப்பிச் சுற்றி நின்றவர்களைப் பார்த்து தமது அருளைப் புன்னகையோடு குழைத்து அளித்தார்.
வாருங்கள். பாரதம் வலம் வந்த பாதமலர்களுக்கு பூஜைகள் செய்திடுவோம்!

மஹா பெரியவா அருள்வாக்கு : -
நல்லதும் கெட்டதுமாகப் பலது நம்மை பாதிக்கிறது. அதனால் அழுகிறோம், சிரிக்கிறோம். இரண்டும் பாதிப்புதான். இரண்டுமே போதும் போலத்தான் இருக்கிறது. சிரித்தால்கூட ஒரு அளவுக்கு மேலே போனால் வயிற்றை வலிக்கிறது! பலஹீனமாகிறது. சிரிப்பு மூட்டாதே!” என்று கோபித்துக் கொள்கிறோம். ஆனந்தமாக டான்ஸ் பண்ணினாலும் உடம்பு அசந்து போகிறது. போதும் என்றாகிவிடுகிறது. ஒரு பாதிப்பும் இல்லாமல் விச்ராந்தியாக இருக்க மாட்டோமோ என்றுதான் இருக்கிறது. இதுதான் நமக்கு வேண்டியது. அத்வைதமுமில்லை, த்வைதமும் இல்லை.
இதற்கு என்ன பண்ணலாம் என்று பார்க்கிறோம். பாதிப்பு எப்படிப் போகும் என்று ஆலோசித்துப் பார்த்தால் ஒன்று தெரிகிறது. ‘முதலிலே காங்கோ யுத்தம் பற்றிய நியூஸ் வந்தபோது விழுந்து விழுந்து படித்தோமே, அப்புறம் ஏன் விட்டுப் போச்சு? அது ஏன் இப்போது நம்மை பாதிக்கவில்லை’ என்று ஆலோசித்தால், இடத்தில் (space-ல்) ஒன்று தள்ளிப் போகப் போக அதன் பாதிப்பு குறைகிறதென்று தெரிகிறது. பத்து வருஷம் முந்தி பிதா காலமானபோது அத்தனை அழுத நம்மை இப்போது அது ஏன் பாதிக்கவில்லை என்று யோசித்துப் பார்த்தால், காலத்திலே தள்ளிப் போகப் போக, பாதிப்பு குறைகிறது என்று தெரிகிறது. அதனால் நாம் பாதிப்பே இல்லாமலிருக்க வேண்டுமானால் பக்கத்திலேயே நடப்பதை காங்கோவில் நடக்கிற மாதிரி பாவிக்கப் பழக வேண்டும்; இந்த க்ஷணத்தில் வருகிற நல்லது பொல்லாததுகளைப் பத்து வருஷத்துக்கு முந்தி நடந்த மாதிரிப் பார்க்க அப்யாஸம் செய்ய வேண்டும்.
எத்தனை ஸந்தோஷமும், துக்கமும் சாச்வதமாக இல்லாததால், எல்லாம் relative-தான் (ஸ்வய சக்தி இல்லாமல், இன்னொன்றைச் சார்ந்திருப்பதுதான்) என்று தெரிந்துவிட்டது. அதனால் இன்னொன்றைச் சாராமல் தன்னில் தானாக நிறைந்துAbsolute- ஆக இருப்பதைப் பிடித்தால்தான் பல தினுஸான பாதிப்பு இல்லாமல் சாச்வத அமைதியாக இருக்கும் என்று தெரிகிறது. இதுதான் spirituality-யில் (ஆத்மிகத்தில்) ஐன்ஸ்டீனின் Relativity Theory (சார்புக் கொள்கை)! அவரும்Time, Space-ஐத்தானே சொல்கிறார்?
Thanks Balhanuman
மஹா பெரியவா அருள்வாக்கு -
ReplyDeleteஅருமையான பகிர்வுகள்.பாராட்டுக்கள்.!
பதிர்விற்கு நன்றி .பாராட்டுக்கள் Balhanumanuku உரியது இராஜேஸ்வரி அவர்களே
ReplyDelete